இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அபார சதமடித்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. 2-வது டெஸ்ட் போட்டி, ஹாமில்டனில் இன்று தொடங்கியது.
நியூசிலாந்து அணியில், டிரன்ட் போல்ட், கிராண்ட் ஹோம் ஆகியோருக்குப் பதிலாக டேரில் மிட்செல், மாட் ஹென்றி சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர், ஜேக் லீஸ் ஆகியோருக்குப் பதிலாக, ஸாக் கிராவ்லே, கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டனர். 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராவல் 5 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதமுடன் கேப்டன் வில்லியம்சன் இணைந்தார். வோக்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்சன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஸ் டெய்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த அவர், 53 பந்துகளில் ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டையும் வோக்ஸ் கைப்பற்றினர். பின்னர் லாதமுடன் நிக்கோலஸ் இணைந்தார். நிதானமாக ஆடிய லாதம் சதம் அடித்தார்.
குளிர்பான இடைவேளை வரை அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்த நிலையில் ஆடி வருகிறது. லாதம் 101 ரன்களுடனும் நிக்கோலஸ் 5 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.