cbecpy@gmail.com      +9198944 75754

கருப்பின வீரனின் முதல் வெற்றி ’42’ - அமெரிக்க திரைப்படம்.

Home / Movies / கருப்பின வீரனின் முதல் வெற்றி ’42’ - அமெரிக்க திரைப்படம்.
  15-Oct-2019  
Movies Back to

கிரிக்கெட், கால்பந்து, பேஸ் பால், கபடி, ஹாக்கி என உலகம் முழுக்க விளையாடப்படும் குழு விளையாட்டுகளுக்கு தனித்தனியாக தோற்றம் வரலாறு என்றெல்லாம் உண்டு. எல்லா நாடுகளிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது தான். ஆனால் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் குழு என ஒன்று உண்டில்லையா…? அதன் செயல்பாடுகள் என்ன…? ஒரு வீரர் அணியில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்…? திறமை தான் உண்மையில் அளவீடாக பார்க்கப்படுகிறதா…? என்றால் பொதுவான பதில் இல்லை என்பது தான்.

மனிதன் மனிதனை விலை பேசி விற்ற காலமெல்லாம் மலைஏறி விட்டதாக நினைக்கலாம். ஆனால் இன்றும் மனிதர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். பகிரங்கமாக விற்கப்படுகிறார்கள். ஒரு கிரிக்கெட் வீரரை இந்த நிறுவனமோ இந்த நடிகரோ இந்த விலைக்கு ஏலமெடுத்தார் இந்த வீரர் இத்தனை கோடிக்கு விலைபோனார் என்பது வெறும் செய்தியாக கடந்து போக வேண்டிய விஷயமல்ல. இது அபத்தமான மனித வியாபாரம். ஆபத்தான மனிதவிரோதம். 2013'ல் வெளிவந்த ‘42’ என்ற திரைப்படம் ஜாக்கி ராபின்சன் என்ற கருப்பின பேஸ்பால் விளையாட்டு வீரனின் வாழ்வைப் பேசுகிறது.

1947ல் அமெரிக்கர்களின் ப்ரிய விளையாட்டான பேஸ்பால் ஆட்டத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட சேர்க்கப்பட்டிருக்கவில்லை.  ‘ப்ரூக்லின் டூக்கர்ஸ்’ என்ற பேஸ்பால் விளையாட்டு அமைப்பை ’ரிக்கி’ என்ற முதியவர் நிர்வகித்து வந்தார். அவர் ஒரு முன்னாள் பேஸ்பால் வீரர், அவர் இந்த விளையாட்டை சிலவேறு கோணங்களில் பார்க்கிறார். ஒன்று இதில் நிறவெறி கூடாது மற்றொன்று இது அவரது பிரதான வணிகம்.

அதற்காக ’ஜாக்கி ராபின்சன்’ என்ற கருப்பினத்தவரை தனது பேஸ்பால் குழுவில் விளையாட ஒப்பந்தம் போடுகிறார். அதுவரை வெள்ளையர்கள் மட்டுமே விளையாடிவந்த இந்த விளையாட்டில் புதிதாக ஒரு கருப்பினத்தவர் சேர்க்கப்பட்டால் சந்திக்கப் போகும் விளைவுகளை அவர் நன்கு அறிவார். ஆனாலும் இதை செய்வதால் பெறப்படும் கவன ஈர்ப்பையும் வணிகத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறார்.

‘ஜாக்கி ராபின்சன்’  ‘ப்ரூக்லின் டூக்கர்ஸ்’ பேஸ்பால் குழுவில் இணைந்து விளையாட அவருக்கு பெரும் தொகை ஊதியமாக பேசப்படுகிறது. ஆனால் ராபின்சனை பொருத்தவரை இது அவருக்கும் அவரது இனத்திற்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. இதை அவன் சரியாக பயன்படுத்திக் கொண்டால் ஒரு இனத்தின் இருள் பயணத்தில் முகப்பு விளக்காக அவரது வெற்றி மாறும். ‘ஜாக்கி ராபின்சன்’ துணிச்சலாக விளையாட ஒப்புக் கொள்கிறார்.

அவருடைய சக வீரர்கள் ராபின்சனை சற்றும் மதிப்பதில்லை, அவர்களோடு இணைந்து உணவோ தங்குமிடமோ கூட ராபின்சனால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மைதானத்தில் விளையாடும் போது எதிர் அணியினரால் “ஏய் நீக்ரோ, ஏய் நீக்ரோ” என பகிரங்கமாகவே ராபின்சன் சீண்டப்படுகிறார். ஆனால் ராபின்சனின் இலக்கு தன்னை சீண்டுபவர்களுக்கு தற்காலிகமாக பதில் சொல்வது அல்ல. ஒடுக்கப்படும் தங்கள் கருப்பின மக்களுக்கு நிரந்தர வெற்றி வாசலை திறக்கும் சாவி தன்னிடம் உள்ளது என நினைத்தார். அந்த பெரும் பொறுப்பு அவரை பொறுமையாக இருக்கச் செய்தது. என்றாலும் அவரும் மனிதன் தானே..? நிராகரிப்புகளால் சில வேளைகளில் உடைகிறது மனம். உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்குகின்றன. ஆனாலும் மக்கள், மனைவி எல்லோரும் ராபின்சனுக்கு உற்சாகம் கொடுக்கிறார்கள்.

மைதானத்தில் ராபின்சன் எவ்வளவு பெரிய சாகசம் செய்தாலும் கூட வெள்ளையர்கள் கைதட்டி உற்சாகப் படுத்தாமல் மவுனமாக இருக்கிறார்கள். ராபின்சனோ எதையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. ராபின்சன் உழைப்பது, திறமைக்கு கிடைக்கப் போகும் புகழுக்கோ அங்கீகாரத்துக்கோ இல்லை. பேஸ்பால் விளையாட்டில் கருப்பினத்தவர்களுக்கும் ஒரு இடம்.. அது தான். மீண்டும் மீண்டும் ராபின்சனை உந்தித் தள்ளியது. ராபின்சனை பொறுத்தவரை அது விளையாட்டு மைதானம் அல்ல யுத்தக்களம். அந்த வெறி அவனது ஆட்டத்தில் வெளிப்படுகிறது. பல இன்னல்களுக்கு பிறகு தான் நினைத்ததை சாதித்தும் காட்டிவிடுகிறார்.

இது ஒரு உண்மைக் கதை என்பதால் நிஜ நாயகன் ‘ஜாக்கி ராபின்சன்’ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 1919-ல் ஜார்ஜியாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே தன் தந்தையால் கலிபோர்னியா அழைத்துவரப்பட்டு அங்கேயே வளர்ந்தார். மேஜர் லீக் பேஸ்பால் சங்கத்தில் சேர்ந்து விளையாடிய முதல் ஆப்ரிக்க-அமெரிக்கர் இவர். 1947ல் தனது விளையாட்டு வாழ்வை துவங்கிய அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் அத்துறையில் கோலோச்சினார். அதுவரை பேஸ்பால் ஆட்டத்தில் இருந்த நிறவெறி தழும்புகளை தனது வியர்வையால் அழித்தார் அவர். அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர் தனது 53வது வயதில் நீரிழிவு நோயால் காலமானார்.

அமெரிக்க பேஸ்பால் விளையாட்டில் கருப்பின மக்களுக்கான முதல் வெற்றிப் பந்தை உயரே அடித்த ’ஜாக்கி ராபின்சன்’ அணிந்து விளையாடிய சீருடை எண் ’42’ இதனை இன்றும் அமெரிக்க பேஸ்பால் வீரர்கள் வருடத்திற்கு ஒரு முறை அவர் நினைவாக அணிவார்கள். நீக்ரோ லீக்ஸ், மைனர் லீக்ஸ், மேஜர் லீக்ஸ் என படிப்படியாக உயரம் தொட்டவர் ‘ஜாக்கி ராபின்சன்’. அமெரிக்காவில் அவருக்கு நினைவிடங்கள் அவர் பெயரால் விளையாட்டு கழகங்கள் எல்லாம் உண்டு.

இயக்குனர் ‘பிரையின் ஹெல்ஜிலாண்ட்’ ’ஜாக்கி ராபின்ச’னின் வாழ்க்கையின் சில பகுதிகளை அவர் அணிந்து விளையாடிய சீருடை எண் ‘42’ என்ற பெயரிலேயே சினிமாவாக இயக்கினார். 2013ஆம் வருடம் வெளியான இத்திரைப்படம் ஆப்ரிக்கன்-அமெரிக்கன் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதை வென்றது. மேலும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஹோச்சி பிலிம் விருது 2013, கீ ஆர்ட்ஸ் வழங்கும் சிறந்த ஒலி, ஒளி தொழில்நுட்பத்திற்கான விருது என பல விருதுகளை இப்படம் பெற்றது.

இங்கு விளையாட்டு வெறும் விளையாட்டாக இல்லை அது விளையாட்டு காரியமும் இல்லை இதற்குள் அரசியல் இருக்கிறது, இனவெறி இருக்கிறது, அதிகாரமும் அடக்குமுறையும் ஒளிந்திருக்கிறது. இரு எதிரி நாடுகள் மைதானத்தில் மோதிக் கொள்வதை விளையாட்டாக அல்லாமல் யுத்தம் போல சித்தரிப்பதன் மூலம் ஆதாயம் பெறுவது பன்னாட்டு நிறுவனங்களும் சூதாட்டத் தரகர்களும் தான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.