ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியின் அரசியல் குறித்து பேசினார்.
அதில்,ரஜினி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கருத்து இருக்கும். தர்பாரிலும் கருத்து இருக்கும் என நம்புகிறோம். அதுவும், இந்த நேரத்தில் ரஜினி படம் நடிப்பது சந்தோஷம். கமல்ஹாசனின் போஸ்டர் ஒட்டிருந்தால் நாங்கள் சாணி அடித்திருக்கோம். ஆனால் அவர்கள் எப்படிப்பட்ட நண்பர்கள் என இப்போதுதான் தெரிகிறது.
நாங்கள் இப்போது உணர்ந்துவிட்டோம். அதிசயம் அற்புதம் என எவ்வளவோ பேர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் ரஜினி சொன்னால் தான் அனைவரும் பேசுவார்கள். ரஜினியே ஒரு அதிசயம். அவர் ஒரு அற்புதம்.
யார் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினியைப்போல் தன்னடக்கம், அமைதி யாருக்கும் வராது. ரஜினிகாந்த் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா? யாராவது 100வது படத்தில் ஆன்மீகத்தை சொல்வார்களா? ஆனால் ரஜினிகாந்த் ராகவேந்திரா மூலம் சொன்னார்.
ரஜினிகாந்த் படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்; ஆனால் பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான்; சூப்பர் ஸ்டார் என்பதே ரஜினிகாந்த் தான்
பாபா படத்திற்கு நஷ்டத்தை திருப்பி கொடுத்தார். யாராவது செய்வார்களா? இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? அவர் நிச்சயமாக பணம் சம்பாரிக்க வரவில்லை. அரசியலுக்கு ஏன் அவர் வருகிறார் என்று புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM