அஜித் தனது ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு அடுத்து அதே இயக்குனர் எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார். அதற்கு ‘வலிமை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தலைப்பு கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இப்படம் குறித்த செய்தியை அவரது ரசிகர்கள் தீயாக பரப்பி வருகின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எல்லோரும் ஆர்வமாக காத்திருகின்றனர்.
இந்நிலையில், இதற்கான படப்பிடிப்பு டிசம்பர் 11 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக சில ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளன. ஆனால் இதனை இன்னும் படக்குழு உறுதி செய்யவில்லை. “ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஒரு சிறிய பூஜை விழா நடைபெற உள்ளது. அதன் பிறகுப் படப்பிடிப்பு தொடங்கும்.
அஜித், இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அவருக்கான காட்சிகளுடன்தான் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இவருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் உறிதியாகவில்லை. ஆனால் பாலிவுட்டின் சிறந்த கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்தப் படப்பிடிக்கான அட்டவணையில் ஹீரோயின் சார்ந்த காட்சிகள் எடுக்கப்படவில்லை. இதன் பிறகுதான் நாயகி யார் என படக்குழு முடிவு செய்ய உள்ளது” என ‘வலிமை’ படத் தயாரிப்பு சார்ந்த வட்டாரம் கூறியுள்ளது.
அஜித் இளம் தோற்றத்தில் முறுக்கு மீசையுடன் கூடிய படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அந்தப் படங்கள் ’வலிமை’யின் தோற்றமாகவே இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால், இதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது. இப்படத்தில் ஒரு பாத்திரம் ஏற்கெனவே வெளியான தோற்றத்தில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால், அஜித்தின் முழுமையான தோற்றம் என்ன என்பது இன்னும் இறுதியாகவில்லை. மேலும், இப்படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது தெரியவில்லை. நிச்சயம் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் அஜித்துடன் இணைய இருக்கிறார்கள். இந்தப்படம் ஒரு குடும்பக் கதையாக உருவாக உள்ளது. மேலும், ரேஸ் காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு அம்சமாக கொண்டதாகவும் இருக்கும் என தகவல் கசிந்து வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM