மைதானத்தில் விளையாடும் போது ரிஷாப் பண்ட் வாய்ப்பை தவறவிட்டால், தோனி பெயரைச் சொல்லி ரசிகர்கள் கத்துவதாக விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்தப் பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதல் டி20 போட்டி நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷாப் பண்ட்க்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரிஷாப் பண்ட்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “ரிஷாப் பண்ட்-ஐ தொடக்க வீரராக களமிறக்குவது குறித்து முடிவு செய்யப்படவில்லை. இந்திய அணியில் தற்போது 3/4 டாப் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். சாஹா கூட கொல்காத்தாவில் நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவரிடம் நான் டி20 போன்ற குறுகிய போட்டிகளில் விளையாடுமாறு கூறினேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரிஷாப் பண்ட்-ஐ நாங்கள் நம்புகிறோம். ஆனால், சிறப்பாக விளையாட நாம் அனைவரும் அவருக்கு சில வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ரிஷாப் தனது வாய்ப்பை தவறவிடும் போதெல்லாம், எப்போதும் போல மைதானத்தில் தோனியின் பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள். அது மரியாதையான செயல் அல்ல. எந்த வீரரும் இதனை விரும்பமாட்டார். ரிஷாப் தவறு செய்தாலும் அவர் நமது நாட்டிற்காக விளையாடுகிறார் என நினைத்து ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.