ஹைதராபாத் என்கவுன்ட்டரால் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளதாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ட்வீட் செய்துள்ளார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த என்கவுன்ட்டருக்கு ஆதரவும் எதிர்ப்பும் என்று கலவையான கருத்துகள் வந்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் "நீதி வழங்கப்பட்டுள்ளது, திஷாவின் ஆன்மா சாந்தி அடையும்" என்று தெலங்கானா காவல்துறையின் என்கவுன்ட்டர் நடவடிக்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.