வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அந்த அணியில், அதிகபட்சமாக ஹெட்மயர் 56, லெவிஸ் 40, பொல்லார்டு 37 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 208 ரன்கள் என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர், கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருக்கு நிதானமாக விளையாடி கேப்டன் விராட் கோலி நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
கே.எல்.ராகுல் 63 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரிஷப் பணி அதிரடி காட்டி 18 ரன்னில் நடையைக் கட்டினார். ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்னில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி தொடர்ச்சியாக சிக்ஸர், பவுண்டரிகள் விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதை நோக்கி கொண்டு சென்றார்.
இறுதியில், இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 6 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.