இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ரோகித் இப்போட்டியில் அடிக்கும் ரன்களை விட 3 ரன்கள் அதிகமாக அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை அதிகப்பட்சமாக இந்திய வீரர் ரோகித் சர்மா 2547 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இதுவரை 2544 ரன்கள் அடித்து அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார். எனவே இந்தப் போட்டியில் ரோகித்தை விட விராட் மூன்று ரன்கள் அதிகமாக அடிக்கும் பட்சத்தில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் டி20 போட்டிகளில் இதுவரை 12 முறை ஆட்டநாயகன் விருதை விராட் கோலி பெற்றுள்ளார். இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றால் டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் முகமது நபி சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.