ஓய்வு பெற வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு தன்னுடைய மகன் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறிவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கான ஹீரோவாக இருந்த இந்த ஆல்ரவுண்டர், 2019 ஜூன் மாதம் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார். யுவராஜ் கடைசியாக சர்வதேச போட்டியில் 2017 ஆம் ஆண்டில் விளையாடினார். ஓய்வு பெற்றதிலிருந்து, யுவராஜ் உலகெங்கிலும் நடைபெறும் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார். இவற்றில் சமீபத்தில் அபுதாபி நடைபெற்ற டி10 போட்டியை கூறலாம்.
இந்நிலையில், யுவராஜ் சிங் அதிகாரப்பூர்வமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஒரு வருடம் இன்னும் கடக்கவில்லை, ஆனால் ஒரு முன்னாள் வீரராக மாறுவது அவருக்கு நீண்ட காலத்திற்கு முன்பே நடந்துவிட்டது என்று அவரது தாய் ஷப்னம் சிங் கூறி இருக்கிறார்.
“இந்த மாற்றம் ஏற்கனவே ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதை அவர் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என்று அவருக்குத் தெரியும்” என்று ஷப்னம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும், அந்தப் பேட்டியில், “ஓய்விலிருந்து தப்பிக்காத வீரர்களே இல்லை. அவர் தனது அறக்கட்டளை மூலம் பல காரியங்களை செய்து வருகிறார். கிரிக்கெட் அல்லாத மற்ற விளையாட்டுகள், ஃபேஷன் துறை என இயங்கி வருகிறார். இப்படி நிறைய விஷயங்கள் அவருக்கு உள்ளன. எனவே அவர் மாறுவது மிகவும் எளிதானதாக இருந்தது. ஏனெனில் அவர் அதற்கு முன்பே தயாராக இருந்தார்.
அவர் இப்போது மிகவும் இயல்பாக இருக்கிறார். மேலும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் கிரிக்கெட் அல்லாத மற்ற விளையாட்டுகளை விளையாடுகிறார். அவர் டென்னிஸ், கோல்ஃப் என ஈடுபடுகிறார். அதற்காக அவர் எல்லா இடங்களுக்கும் செல்கிறார். யுவராஜ் இப்போது மிகவும் நிதானமாக இருக்கிறார். ஆகவே அவரால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
‘எனக்கு முதுகுவலி ஏற்பட்டது. ஆகவே என்னால் என் உடலை அதிகம் எதிர்த்துப் போராட முடியாது’ என ஒரு போட்டியின் போது அவர் கூறி இருந்தார். மேலும் அவர், ‘மனரீதியாக நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆனால் உடல் அதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. எனவே அடுத்த விளையாட்டுக்கு நான் பொறுத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.
எப்போதுமே யுவராஜ் அதிகமாக விளையாட விரும்புவார். இது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் நடக்கும். இதில் அசாதாரணமானது எதுவும் இல்லை. அவர் இன்னும் விளையாட விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. ஆகவே அவர் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு முன்னேறிவிட்டார். அவர் மிகவும் மகிழ்ச்சி இருக்கிறார்” என மகனை புரிந்து கொண்டு மிக அழகாக பேசி இருக்கிறார் யுவராஜ் தாயார்.