ஊக்கமருந்து தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முறைகேடு செய்ததால், ஒலிம்பிக் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா பங்கேற்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது.
ஊக்கமருந்து தொடர்பான அறிக்கையில் முறைகேடு செய்ததாக ரஷ்யா மீது புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. ரஷ்யா முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா, எந்த ஒரு சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக், 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்போட்டிகளின் போது ரஷ்ய நாட்டுக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.