வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை சிதறடித்து இந்தியா 240 ரன்களை குவித்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற இரு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ராகுலும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரோகித் சர்மா 34 பந்துகளில் 71 ரன்களை விளாசினார். இதனையடுக்கு களமிறங்கிய பன்ட், எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
ஆனால், ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். 56 பந்துகளில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி ஓவரில் ராகுல் ஆட்டமிழந்தார். இந்தியா தனது 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்ளை குவித்தது. கேப்டன் கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.