முதல் பேட்டிங் குறித்து அணிக்குள் நிறைய பேசியதாகவும், அதன்படியே பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் 240 ரன்கள் குவித்த இந்திய அணி, 67 ரன்களில் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, “முதல் பேட்டிங் குறித்து அணிக்குள் நிறைய பேசினோம். அதன்படியே வெற்றி பெற்றோம். ராகுலிடம் நீண்ட நேரம் விளையாட வேண்டும் எனக் கூறினேன், அவரும் இறுதிவரை விளையாடினார். எனது இரண்டாவது திருமண நாள் அன்று இந்த வெற்றி பெற்றுள்ளோம். இதை எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.\
அதிலும் முதல் பேட்டிங் செய்து வென்றதை ஸ்பெஷலாக கருதுகிறேன். மூன்ற ரக கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. முடியும் என்பதை உங்கள் மனதிற்குள் நிறுத்தினால் அது முடியும். உலகக் கோப்பை வரும் வேளையில் இப்படி ஒரு வெற்றி ஊக்குவிப்பாக உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் டி20 போட்டிகளில் விளையாடி இப்படி பேட்டிங் செய்தது நன்றாக உள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடினர். முதலில் பேட்டிங் என்னும்போது ஒரு இறுக்கமும், தயக்கமும் இருந்தது. ஆனால் இந்த மைதனாம் எங்களை எளிமையாக விளையாட அனுமதித்தது” என்று கூறினார். விராட் கோலி தொடர் நாயகன் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.