ஐபிஎல் ஏலத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த 7 வீரர்கள் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பட்டியல் செய்யப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள் குழு பங்கேற்கவுள்ளனர். ஐபிஎல் போட்டியின் ஏலத்திற்காக மொத்தம் 997 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 337 வீரர்கள் தற்போது ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் 186 இந்திய வீரர்களும், 143 வெளிநாட்டு வீரர்களும், மேலும் மூன்று பேர் இணை நாடுகளை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
வீரர்களின் விலை மதிப்பு அதிகபட்சம் ரூ.2 கோடியாகவும், குறைந்தபட்சம் ரூ.50 லட்சமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ரூ.2 கோடி மதிப்பில் வெளிநாடுகளை சேர்ந்த 7 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியவை சேர்ந்த பட் கம்மின்ஸ், ஜோஸ் ஹஸ்ல்வுட், கிரிஸ் லின், மிட்ஜெல் மார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும், தென்னாப்பிரிக்காவை டேல் ஸ்டின் மற்றும் இலங்கை சேர்ந்த ஏஞ்சலோ மேத்தீவ்ஸ் ஆகியோர் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவைச் சேர்ந்த ராபின் உத்தப்பா ரூ.1.5 கோடி மதிப்பிலும், பியூஸ் சாவ்லா, யூசுஃப் பதா, ஜெயதேவ் உனாட்கட் ஆகியோர் ரூ.1 கோடி மதிப்பிலும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.