இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உடல்நலம் தேறியுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் பெரும் பலமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. பல போட்டிகளை இறுதி நேரத்தில் கட்டுக்குள் கொண்டுவந்து வெற்றியை கொடுத்திருக்கிறார் பும்ரா. ஆனால் அண்மைக்காலமாக முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இவர் சிகிச்சையில் உள்ளார். பும்ரா இல்லாமல் அணியின் பந்துவீச்சு பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் பும்ராவின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை அணிக்குள் கொண்டுவர இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதன்படி, வரும் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் வெஸ்ட் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயிற்சியின் போது, பும்ராவை கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு எதிராக பந்துவீசச் செய்யவுள்ளனர். அவரது உடல் ஒத்துழைப்பதை பொறுத்து அடுத்தகட்டமாக அவரை லண்டனுக்கு மருத்துவ சோதனைக்காக அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு வருகை தரும் ஒருநாள் தொடரில் பும்ராவை களமிறக்கவும் இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில தொடர்களில் விளையாடாமல் இருக்கும் நிலையிலும், ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் உலகத்தர வரிசையில் பும்ரா முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.