மேற்கிந்திய தீவுகள் உடனான இருபது ஓவர் தொடரை இந்தியா, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகள் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தயாராகி வருகின்றன.
அண்மைக்காலமாக இந்திய அணி சொந்த மண்ணில் அசுர ஆட்டத்திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங்கில் எதிரணியை மிரட்டுகிறார்கள். அதேபோல, முகமது ஷமி, தீபக் சஹார் ஆகியோர் நேர்த்தியாக பந்துவீசி வருகின்றனர். முதல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அணியில் இடம்பெற்றுள்ள யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறியிருப்பது ஃபீல்டிங் எனலாம். குறிப்பாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் பல எளிய கேட்ச்களை இந்திய வீரர்கள் நழுவவிட்டு அதிர்ச்சி அளித்தனர். எனவே இப்போட்டியில் ஃபீல்டிங்கில் முன்னேற்றம் காண இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் அச்சுறுத்தும் அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் அணிவகுக்கின்றனர். சிம்ரான் ஹெட்மயர், ப்ராண்டன் கிங், நிகோலஸ் பூரன், சிம்மன்ஸ் ஆகியோர் வேகமாக ரன் சேர்ப்பதில் வல்லவர்களாக திகழ்கிறார்கள். பந்துவீச்சில் ஷெல்டன் கார்ட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஹைடன் வால்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். இருப்பினும் இந்திய அணியை விட அந்த அணி சற்று வலுகுறைந்ததாகவே பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் இரு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் இந்த ஆட்டம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.