உலகக் கோப்பை டி20 போட்டியில் தோனி பங்கேற்பது குறித்து ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகக் கோப்பை தொடருக்கு பின்பு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உலகக் கோப்பைக்கு பிறகு சில மாதங்கள் அவர் தனது துணை ராணுவ பிரிவில் பயிற்சி பெற்றார். அதன்பிறகு தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் விரைவில் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை டி20 போட்டியில் தோனி விளையாடுவது குறித்து ரவி சாஸ்திரி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ரவி, “தோனி இடைவெளி விட்டது விவேகமானது. அவர் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடத் தொடங்கும் காலத்தை நான் விரும்பி எதிர்பார்க்கிறேன்.
அவர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அதிக அக்கறை கொண்டவர் என நான் நினைக்கவில்லை. அவர் டெஸ்ட் ஆட்டத்துடன் முடித்துவிட்டு போனார். டி20 என்பது ஒரு விருப்பம். அது அவருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு வடிவம். ஆனால் அவரது உடல் சமாளிக்குமா என்பதற்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘இந்தியா டுடே ’வின் ‘இன்ஸ்பிரேஷன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி சாஸ்திரி இவ்வாறு கூறியுள்ளார்.