சென்னையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, 48-வது ஓவரின் போது விரைவாக ஒரு ரன் எடுக்க முயன்ற ஜடேஜாவை, ரோஸ்டேன் சேஸ் ரன் அவுட் ஆக்கினார். எனினும், இதை கள நடுவர் ஏற்கவில்லை. அதேநேரத்தில் ஜடேஜா எல்லை கோட்டை தொடாமல் இருந்தது டிவி ரீப்ளேவில் தெரியவந்தது.
அது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பான நிலையில், அதை நடுவர் கவனத்துக்கு கொண்டு சென்றார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு. இதையடுத்து மூன்றாவது நடுவர் தலையிட்டு ஜடேஜாவுக்கு அவுட் வழங்கினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, மைதானத்துக்கு வெளியே தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருப்பவர்கள், கள நடுவரின் முடிவில் எப்படி தலையிட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடுவர்களும், மேட்ச் ரெப்ரீயும் அந்த நிகழ்வை மீண்டும் பார்க்க வேண்டும் என்றும் கோலி வலியுறுத்தினார். அதேநேரத்தில், கடைசியில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு கூறியுள்ளார்