அரசியல் சாராத புதிய இயக்கத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் உதவும் தன்மை கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். வர்தா புயல் காலத்தில் அவர் செய்த உதவிகளை மக்கள் அவ்வளவு லேசில் மறந்திருக்க மாட்டார்கள். அதே போல் மாற்றுத் திறனாளிகளுக்காக அவர் பல வருடங்களாக சேவை செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு சமயத்தில் களத்தில் இறங்கி அவர் பொருளாதார ரீதியில் உதவிய போது பலத்தரப்பினரும் அவரை பாரட்டினர்.
சர்ச்சைகள் எதிலும் மாட்டாமல் இருந்த லாரன்ஸ், திடீரென்று ஸ்ரீரெட்டி விவகாரத்தில் மாட்டினார். அப்போதும்கூட அவர் மிக இயல்பாக அந்தப் பிரச்னையை அணுகினார். ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு தேவை என்றால் வழங்க தயார் என அறிவித்தார். அதன் பிறகு லாரன்ஸுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் லேசாக உரசல் ஆரம்பமானது. அப்போதும் அவர் மிக அமைதியாகவே இருந்தார்.
இந்நிலையில்தான், அவர் கமல்ஹாசன் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையானது. ரஜினியை உயர்த்தி பேசுவதற்காக கமலை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக பலரும் வேதனை தெரிவித்தனர். ஆனாலும் அதன் பிறகு அவர் கமலை சந்தித்து அந்தச் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது அவர் ஒரு புதிய அறிக்கையை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “
நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்.
இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்.
மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக் கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்.
நான் ஒரு தனி மனிதன்.
எனக்கென்று தனிக் கூட்டமில்லை.
நான் படிக்காதவன்.
ஒரு தனி மனிதனாய் நின்று, ‘அன்புதான் தமிழ்’
என்கிற,
அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன். இந்த அமைப்பின் மூலம்,
தமிழரின் மாண்பையும்,
தமிழரின் பண்பையும்,
தமிழரின் அன்பையும்,
உலகறிய செய்வதே அதன் நோக்கம்!
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’
என்ற திருக்குறளை பின்பற்றியே,
"எதிரிக்கும் உதவி செய்,
பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை,
நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு, உள்ளத்தால் ஒன்றே.
கடவுளை வெளியே தேடாதே!, உனக்குள் இருக்கிறார். எனக்கு இது போதும் என்று நினை.
ஆசையை விடு!
அள்ளிக்கொடு!. ஆண்டவன் உன் பக்கம்.
அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால்....
தர்மம் இருப்பது உண்மையானால்...
என்வழி உண்மையானால்...
நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு
இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்.
இறுதியாக ஒன்று....
என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும்,
அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும்,
நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில காலமாக அவரை குறிப்பிட்டக் கட்சியினர் தாக்கி பேசி வருவதாக புகார் எழுந்த நிலையில், அவர் இந்த அமைப்பைத் தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.